"மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம்" - RBI அறிவிப்பு!
மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு ஒருவர் ரூ. 5 லட்சம் வரை யுபிஐ செயலி மூலமாக செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற டிசம்பர் மாத நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5-ஆவது முறையாக எந்தவித மாற்றம் இன்றி 6.5 சதவிகிதமாகத் தொடரும் என்றும், வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : 3 மாநில முதலமைச்சர்களை தேர்வு செய்ய குழு – பாஜக அறிவிப்பு!
மேலும், 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து, வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது என்றும் ஆளுநர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது, முக்கிய அறிவிப்பாக, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாக செய்யப்படும் சில குறிப்பிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு தனிப்பட்ட நபர் ஒருவர் ரூ. 5 லட்சம் வரை யுபிஐ செயலி மூலமாக செலுத்தலாம் என்றும், யுபிஐ பயனர்களுக்கு பெரிதும் உதவும் என்றும் RBI கூறியுள்ளது.