மக்களவையில் நடந்தது என்ன..? - தமிழ்நாடு எம்.பி.கனிமொழி தகவல்!
பாதுகாப்பை மீறி மக்களவைக்குள் இருவர் நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2 பேர், இருக்கைகளின் மீது ஏறி சபாநாயகர் மாடத்தை நோக்கி ஓட முயற்சித்தனர். கண்ணீர் புகை குப்பிகளை வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்த காவலர்கள் கைது செய்தனர்.
டெல்லியில் இதுகுறித்து எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது: "இன்று (டிச.13) பிற்பகல் நாடாளுமன்ற மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இருவர், திடீரென்று அவைக்குள் குதித்து 'சர்வாதிகாரம் ஒழிக' என்ற முழக்கங்களை எழுப்பியபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசினர்.
பின்னர் மக்களவைக்குள் நுழைந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அவைக்கு வெளியே கோஷமிட்ட இருவர் என ஒரு பெண் உள்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
புதிய நாடாளுமன்றத்திற்கு வந்து இன்று இதுபோன்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பார்வையாளர் பகுதியில் இருந்து யார் வேண்டுமானாலும் எளிதில் உள்ளே நுழைந்துவிடும் அளவுக்குத்தான் கட்டட அமைப்பு இருக்கிறது. பாதுகாப்பின்மைதான் காரணம். இன்று நாடாளுமன்ற தாக்குதல் தினம், எனவே பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி நுழைந்தார்கள் என்று தெரியவில்லை. பாதுகாப்பு அவ்வளவு மோசமாக உள்ளதைத்தான் காட்டுகிறது. எம்.பி.க்களே போட்டோ, அடையாள அட்டை காட்டி, இரண்டு நுழைவாயில்களைத் தாண்டிதான் உள்ளே செல்ல வேண்டும்.
பிரதமர் இருக்கக்கூடிய அவையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து நாங்கள் கேள்வி கேட்டால் கூட தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், எதிரானவர்கள் என்று கூறுகின்றனர். இன்றைய சம்பவம்தான் தேசப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலைதான் இருக்கிறது.
மதிய உணவு இடைவேளை நேரம் என்பதால் அந்த நேரத்தில் அதிகமான பேர் இல்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நடந்திருந்தால் விளைவுகள் அதிகமானதாக இருந்திருக்கலாம். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவத்தையடுத்து, டெல்லி காவல்துறையினர், சிஆர்பிஎப் என அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன" இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.