”இந்தியா - பாக் போரை நிறுத்தியது நான் தான்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவானது. இது அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கை தொடரும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுதப் போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் நிலைமையை புரிந்து கொண்டு போர் நிறுத்தம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் போர் நிறுத்தத்தை உறுதி செய்தால் தான் இரு நாடுகளுடன் வர்த்தக ரீதியாக அணுகுவோம் என்று தெரிவித்ததால்தான் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டதாக ட்ரம்ப் பெருமையாக பேசினார். தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தானின் தாக்குதல்கள் அணு ஆயுதப் போராக உருவாகி பலர் கொல்லப்பட்டிருக்கலாம், அதை தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.