நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி எதிரொலி! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் சில புள்ளிகளை இழந்த இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி சில புள்ளிகளை இழந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், இன்று முடிவடைந்தது. இதில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன்வாயிலாக 2012-ஆம் ஆண்டுக்கு பின் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்திருக்கிறது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்த இந்தியா சில புள்ளிகளை இழந்த நிலையில் முதலிடத்திலேயே தொடருகிறது.
ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ஆம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ஆம் இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (50.00 சதவீதம்) ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்திற்கு வந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா (47.62 சதவீதம்) 5வது இடத்திலும், இங்கிலாந்து (40.79 சதவீதம்) 6வது இடத்திலும் உள்ளன.
இதையடுத்து பாகிஸ்தான் 7-வது (33.33 சதவீதம்), இடத்திலும், 8 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (30.56 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்திய அணி கடும் போட்டியாளரான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மீதமுள்ள 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.