த்ரெட்ஸ் பயன்பாட்டில் இந்தியா முன்னிலை! வெளியான தகவல்!
உலகளவில் த்ரெட்ஸ் செயலி பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா அதிகளவிலான செயல்பாட்டில் உள்ள பயனர்களை கொண்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்திற்கு (ட்விட்டர்) நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான த்ரெட்ஸ் செயலியை மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் செயலியானது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதனை கொண்டே த்ரெட்ஸை பயன்படுத்தலாம். இதற்காக தனி கணக்கு தொடங்க தேவையில்லை. இதில் ஒருவர் 500 எழுத்துக்கள் வரை ஒரு பதிவில் எழுதலாம். இந்த செயலியில் எழுத்து வடிவிலான பதிவுகளே பிரதானம் என்றாலும் கூட, புகைப்படங்கள், ஷார்ட்ஸ், வீடியோக்களையும் பகிர முடியும். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல கோடி பயனர்கள் அதனை டவுன்லோடு செய்து கணக்கு தொடங்கினர்.
இந்த நிலையில், உலகளவில் த்ரெட்ஸ் செயலி பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா அதிகளவிலான செயல்பாட்டில் உள்ள பயனர்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி, பிரபலங்கள் சார்ந்த உரையாடல்கள், விளையாட்டு ஆகிய தலைப்புகள் பிரபலமாக உள்ளதாகவும் மெட்டா குறிப்பிட்டுள்ளது.
மெட்டா குழுமம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "உலகம் முழுவதும் 17.5 கோடி செயல்பாட்டில் உள்ள பயனர்களை மெட்டா கொண்டுள்ளது. உலக சராசரியை காட்டிலும் இந்திய பயனர்கள், மற்றொரு பயனரை பதிவுகளில் மென்ஷன் செய்வதும், மற்றும் தங்கள் பதிவுகளில் வீடியோக்கள் பயன்படுத்துவதும் அதிகம்.
நான்கில் ஒரு பதிவு புகைப்படத்துடன் இடப்படுகிறது. புகைப்படங்கள் அதிகம் பயன்படுத்தும் தளமாகவும் த்ரெட்ஸ் இருக்கிறது. நேரடியாக த்ரெட்ஸில் மொபைல் கேமராவை அணுகி படம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பயனர்களின் விருப்பத்திற்கேற்ப தலைப்புகளை காண்பிக்க த்ரெட்ஸ் செயலி வடிவமைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.