“மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்க இந்தியா தயாராக உள்ளது!” - ஜெர்மனி அதிபர் ஓலாப் உடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் மோடி பேச்சு!
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுப்பதற்கு சாத்தியமான அனைத்து பங்களிப்பையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என குறித்து ஜெர்மனி அதிபர் ஓலாப் உடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் மோடி கூறினார்.
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்த அதிபர் ஓலாப்பை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்நிலையில், அதிபர் ஓலாப் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, இருநாட்டு உறவு, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
பரந்துபட்ட சந்தையை கொண்ட இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்தும் விதமாக உயர்மட்ட குழு ஒன்றுடனும் ஓலாப் வந்திருக்கிறார். இது சீனாவுடனான வர்த்தக போட்டியில் இந்தியாவிற்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸை சந்தித்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் எங்கள் இருவருக்குமே கவலை அளிக்கும் விஷயமாகும். போரினால் பிரச்னைகளை தீர்க்க முடியாது என்று இந்தியா எப்போதும் நம்புகிறது, மேலும் அமைதியை மீட்டெடுப்பதற்கு சாத்தியமான அனைத்து பங்களிப்பையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.
பாதுகாப்புத் துறைகளில் இந்தியா மற்றும் ஜெர்மனியிடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு நமது ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கையின் சின்னமாகும். ரகசிய தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் இந்த திசையில் ஒரு புதிய மைல்கல்லாகும். இன்று முடிவடைந்த பரஸ்பர சட்ட, உதவி ஒப்பந்தம், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதக் கூறுகளைக் கையாள்வதற்கான நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இதனை தொடர்ந்து இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லியில் உள்ள எனது இல்லத்திற்கு வந்த எனது நண்பரான அதிபர் ஓலாப் ஸ்கால்சை நான் வரவேற்றேன். பின்னர் இந்தியா-ஜெர்மனி நட்புறவுக்கு வேகம் சேர்க்கும் பலதரப்பட்ட விஷயங்களை பற்றி விவாதித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வளர்ச்சி ஒத்துழைப்பில் நமது நாடுகள் வலுவான சாதனை பதிவை கொண்டுள்ளன, இதை வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.