"புதிய உத்வேகத்துடன் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்" - வாழ்த்து தெரிவித்து இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
"புதிய உத்வேகத்துடன் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்" என இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்தில் தற்போதைய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, பி.வில்சன், கனிமொழி சோமு, சண்முகம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளார் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் சீதாராம் யெச்சூரி, சாமாஜ்வாதி கட்சி எம்.பி ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மரியாதை செலுத்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது..
“ இந்தியா கூட்டணியின் தலைவர்களான மதிப்பிற்குரிய சோனியா காந்தி, என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி, மதிப்பிற்குரிய பரூக் அப்துல்லா, தோழர் சீதாராம் யெச்சூரி மற்றும் தோழர் டி.ராஜா ஆகியோர் புதுடெல்லியில் ஒன்று கூடி கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவில் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினர்.
As leaders of the #INDIA bloc, including Madam Sonia Gandhi, my dear brother @RahulGandhi, respected Farooq Abdullah, esteemed comrades @SitaramYechury and @ComradeDRaja, gathered in New Delhi to pay heartfelt tributes on the birth anniversary and centenary completion of… pic.twitter.com/Eg9H058gNe
— M.K.Stalin (@mkstalin) June 3, 2024
கூட்டாட்சி மற்றும் ஜனநாயகத்திற்காக தலைவர் கலைஞரின் உறுதியான ஆதரவு தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகித்தது. மிகவும் இக்கட்டான காலங்களில், அவர் மத்திய அரசில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தினார். இந்தியாவின் பல பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் அவரது முக்கிய பங்கு நாட்டின் அரசிலையே சிறப்பாக வடிவமைத்தது.
புதிய உத்வேகத்துடன் ஜூன் 4-ஆம் தேதி நமது கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம் . இது இந்திய மக்களின் வெற்றியாக அமையும் “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.