முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா! இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை!!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி போட்டிக்கு முதல் அணியாக தேர்வாகி அசத்தியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்த நிலையில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இதில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது இந்திய அணி.
அதிகபட்சமாக சுப்மன் கில் 92 ரன்கள், விராட் கோலி 88 மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் அடித்தனர். இலங்கை வீரர் தில்சன் மதுஷங்கா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதன் பின் 358 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை தொடக்கம் முதலே விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.இந்த நிலையில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி.
தொடக்க ஆட்டக்காரகள் இருவரும் டக் அவுட் ஆக, அடுத்தடுத்து வந்தவர்களும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
மொத்தமாக இலங்கை பேட்ஸ்மேன்களில் 5 பேர் டக் அவுட் ஆகினர். இலங்கை அணியில் பவுளரான கசூன் ரஜிதா அடித்த 14 ரன்கள் தான் இலங்கை அணியில் தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதன் மூலம் ஒருநாள் உலக்க கோப்பையில் குறைந்த ஸ்கோரையும், ஒரு நாள் போட்டிகளில் தனது மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தது இலங்கை அணி.
இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் வாயிலாக உலகக் கோப்பைகளில் 3 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் சாதனையை சமன் செய்தார் முகமது ஷமி. முகமது ஷிராஜ் 3 விக்கேட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ராவும், ஜடேஜாவும் தங்கள் பங்குக்கு தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் இந்தியா 50 ரன்களுக்கு ஆல் அவுட் செய்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை இந்தியாவிடம் படுதோல்வி அடைந்ததுள்ளது இலங்கை அணி.
உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியை வீழ்த்தியன் வாயிலாக, இந்தியா 14 புள்ளிகள் பெற்று 7 வெற்றிகள் உடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை மீண்டும் கைப்பற்றியது. மேலும் உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.