Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏக்கள்: ஹரியானாவில் பெரும்பான்மையை இழந்தது பாஜக அரசு!

11:14 AM May 08, 2024 IST | Web Editor
Advertisement
ஹரியானாவில் பாஜகவிற்கு ஆதரவளித்த 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்ற நிலையில், எந்த நேரத்திலும் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் 2014-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜக, 2019-ம் ஆண்டு நடந்த சட்டபேரவைத் தேர்தலில், 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.  காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி 10 இடங்களில் வென்றது. லோக் தள் கட்சி 1 இடத்தில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். அதைத்தொடர்ந்து, 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா (ஜேஜேபி) கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது.
Advertisement

இந்நிலையில், நடந்துவரும் மக்களவைத் தேர்தலின் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பாஜகவுடன் சுமூக தீர்வு எட்டப்படாததால் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனையடுத்து, பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, ஹரியானாவின் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே, பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக சோம்பீர் சங்வான்,  ரந்தீர் கோலன் மற்றும் தரம்பால் கோண்டர் ஆகிய மூன்று சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

எனவே, ஹரியானாவில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனிடையே, ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் முன்னிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மூன்று சுயேட்சை வேட்பாளர்களும், “நாங்கள் பாஜக தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். எங்கள் ஆதரவை காங்கிரஸுக்கு நீட்டிக்கிறோம். பாஜக ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள், சுயேட்சைகளின் ஆதரவைக் கொண்டே ஆட்சியமைத்தது.

ஆனால் ஜனநாயக ஜனதா கட்சி அதன் ஆதரவை திரும்பப் பெற்றுவிட்டது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இப்போது வேலையில்லாத் திண்டாட்டமும், பணவீக்கமும் உச்சத்தில் உள்ளது. இதைப் பார்த்தும் விவசாயிகளின் நலன் கருதியும் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சைகளும் வாபஸ் பெற்றுவிட்டோம். எனவே, சட்டசபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஹரியானாவில் பாஜகவுக்கு எதிரான சூழல்தான் நிலவுகிறது. எனவே மாற்றம் நிச்சயம்” எனத் தெரிவித்தனர்.

ஹரியானா சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை இழந்ததால் அங்கு ஆட்சி கவிழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஹரியானாவில் பாஜக அரசு கலைக்கப்பட்டு தேர்தல் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Tags :
BJPCongressharyanaMLANews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article