#IndependenceDay2024 | பாஜக பேரணிக்கு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி!
நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சுதந்திர தினத்தன்று தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனுமதி கோரி போலீசாரிடம் பாஜகவினர் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மனு அளித்தனர்.
இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து பாஜக கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ண பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு நேற்று (13.08.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், “பேரணி நடத்தத் திட்டமிடப்பட்ட சில பகுதிகளில் குறுகலான சாலை மற்றும் மேம்பால கட்டுமான பணி ஆகியவற்றைக் காரணம் காட்டி இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “யார் வேண்டுமானாலும் தேசியக் கொடி ஏந்தி செல்லலாம். அவ்வாறு செல்லும்போது எந்தெந்த இடங்களில் பேரணி செல்கிறார்கள் என்பது தொடர்பான விவரங்களை போலீசார் அறிந்து, வாகன நெரிசல் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் பேரணிக்கு முழுமையாக அனுமதி வழங்க முடியாது” எனத் தெரிவித்தார். மேலும் இவ்வழக்கு தொடர்பாகக் காவல்துறை உரிய பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்று (14.08.2024) ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பாஜகவின் இருசக்கர வாகன பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. இது தொடர்பான தீர்ப்பில், 'சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடிக்காகவே போராடி, கொடியை காப்பாற்றுவதற்காக உயிரை விட்டவர். அப்படிப்பட்ட தேசியக் கொடியை பேரணியாக எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்க கூடாது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேல் கடந்த நிலையில் இன்றைக்கும் தேசியக்கொடிக்கு அனுமதி மறுப்பது என்பது நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
காவல்துறையினர் இதனை தடுக்கக்கூடாது; அதேநேரம் தேசிய கொடியை எடுத்துச் செல்பவர்கள் அதன் கண்ணியம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; வாகனங்கள் எண்ணிக்கை மற்றும் பேரணி நடத்தப்படும் சாலையின் அளவை பொறுத்து அனுமதி வழங்கப்பட வேண்டும்; காவல்துறையினர், பேரணி எந்த வழியாக செல்கிறது என்ற விவரங்களை கேட்டு ஏதுவான பாதைக்கு அனுமதி வழங்க வேண்டும்; கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்; இருசக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்திருக்கும் நபர் தேசியக் கொடியை பிடித்துக் கொள்ள வேண்டும்' என நிபந்தனை விதித்து நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.