#IndependenceDay - ஈரோட்டில் நள்ளிரவில் பெண்கள் நடை மாரத்தான்!
78வது சுதந்திர தினத்தையொட்டி, ஈரோட்டில் நள்ளிரவில் பெண்கள் ஒன்றுகூடி நடை மாரத்தான் மேற்கொண்டனர்.
78வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோட்டில் இந்தியன் பெண்கள் நெட்வொர்க் அமைப்பின் மூலம், சுதந்திர இந்தியாவில் நள்ளிரவிலும் பெண்கள் எவ்வித பயமும் இன்றி சாலையில் நடமாட முடியும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடை மாரத்தான் நிகழ்வை முன்னெடுத்தனர்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிகே.சரஸ்வதி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் மற்றும் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் கிருத்திகா சிவக்குமார், அமைப்பின் கவர்னர் தீபா சக்தி கணேஷ் தலைமையில் 350க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பங்கேற்றனர். நள்ளிரவு நடைபெற்ற இந்த நடை மாரத்தான் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மற்றும் எஸ்பி ஜவஹர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது பெண்கள் மத்தியில் பேசிய காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், “பெண்கள் நள்ளிரவில் மாரத்தான் மேற்கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் சுதந்திரத்திற்காக பெண்கள் போராடிய வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும். பெண்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. பெண்களால் பெண்களுக்காக என வலியுறுத்துவதும் நன்றாக உள்ளது. இந்த முயற்சியை மேற்கொண்ட அமைப்புக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.
கொட்டும் மழையிலும், வஉசி பூங்காவில் தொடங்கி மேட்டூர் சாலை, அரசு மருத்துவமனை சந்திப்பு பிரிவு, பெருந்துறை சாலை என 2.கி.மீ தூரம் வரை நடை மாரத்தான் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.