#IndependenceDay - தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
78வது சுதந்திர தினவிழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தினவிழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முப்படை அதிகாரிகள், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார். பின்னர் திறந்த ஜீப்பில் காவல்துறையின் அலங்கார அணிவகுப்பை பார்வையிட்டார்.
தொடர்ந்து நாட்டின் தேசியக்கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதனையடுத்து மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
இதனைத்தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.