மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு - ஒரே நாளில் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி!
மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 23-ம் தேதி டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 8 வயது சிறுவன் உட்பட 32 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 25 பேரும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், விருதுநகரை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு ராஜாஜி மருத்துவமனையை பொறுத்தவரையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் 70 முதல் 100க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொள்கின்றனர். இந்த பரிசோதனையில் டெங்கு பாதிப்பு உரிய பரிசோதனை செய்து கண்டறியப்பட்டு டெங்கு வார்டுக்கு மாற்றப்படுகின்றனர்.
இந்நிலையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி மதுரை மாநகராட்சி ஊழியர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.