சாதிய கொடுமையால் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய்!
நெல்லை அருகே நாங்குநேரியில் சாதிய கொடுமையால் தாக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் நடிகரும், தவெக தலைவருமான விஜய்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழ்ங்குவதை கடந்த ஆண்டு நடிகர் விஜய் தொடங்கினார். விஜய் அரசியலுக்கு ஆயத்தமாகிவிட்டார் என அப்போதே பேசப்பட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அதிகரப்பூர்வமாக தொடங்கி அறிவித்த விஜய் 2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த ஆண்டும் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவை, இன்றும், ஜூலை 3-ம் தேதியும் என 2 கட்டங்களாக கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
அரங்குக்கு வந்த விஜய் வரும் போது தளபதி தளபதி பாடல் ஒலிக்கப்பட்டது. விழா மேடைக்கு வந்த விஜய் மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். நெல்லை மாவட்டத்தில் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு வைர மோதிரத்தை வழங்கிய நடிகர் விஜய், அவர்களை குடும்பமாக வரவழைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும், அந்த புகைப்படங்களை மாணவர்களுக்கு உடனடியாக கிடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, விஜய்யிடம் பரிசு பெற்று மேடையிலிருந்து கீழே வரும் போதே மாணவர்களுக்கு புகைப்படங்கள் தயாராக பிரிண்ட் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய விஜய்:
``போதை பொருள் புழக்கம் குறித்து பேசிய விஜய், மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார். `say No To Drugs’ என உறுதி மொழி ஏற்க வைத்தார். கடந்த ஆண்டு நடந்த விழாவில் அம்பேத்கரையும் , பெரியாரையும் படியுங்கள் என மாணவர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கியது குறிப்பிடதக்கது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவாக சாதம், கதம்ப சாம்பார், வத்தக்குழம்பு, தக்காளி ரசம், மோர், உருளை காரக்கறி, அவரை மணிலா பொரியல், அவியல், இஞ்சி துவையல், ஆனியன் மணிலா, தயிர் பச்சடி, அப்பளம், வடை, வெற்றிலை பாயாசம் ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.