எம்புரான் பட சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
பிரித்விராஜ் இயக்கம் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் L2 எம்புரான். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும் படத்தின் மீது பல்வேறு விமசனங்கள் எழுந்தது. ஒருபுறம் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இருப்பதாக வலதுசாரி அமைப்புகளும், மறுபுறம் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு விவசாயிகளும் குற்றம் சாட்டி வந்தனர்.
படத்திற்கு வந்த விமர்சனங்களையடுத்து சர்சைக்குரிய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை எட்டியபோது சுரேஷ் கோபி எம்.பி. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அழுத்தம் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
அதே போல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இவ்விவகாரம் எதிரொலித்தது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த சூழலில் அண்மையில் படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த நிலையில் படத்தின் இயக்குநர் பிரித்விராஜ்-க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் நடித்த மற்றும் இணைந்து தயாரித்த மூன்று படங்களில் இருந்து அவர் பெற்ற வருவாய் குறித்து விளக்கம் கேட்டு அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.