பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள் - டிச.1 முதல் முடக்கம்!
இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை டிச.1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக 'கூகுள்' நிறுவனம் முடிவு அறிவித்துள்ளது.
கூகுளின் ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, யூடியூப், கூகுள் போட்டோஸ், கூகுள் மேப்ஸ், காலண்டர், கூகுள் ஸ்லைட்ஸ், கூகுள் ஷீட்ஸ் உள்ளிட்ட கூகுளின் பல்வேறு தளங்கள் மற்றும் செயலிகளை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
கூகுளின் கணக்குகளை பயன்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட கொள்கையின்படி, 2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தமாக நீக்கப்படும் என்று அறிவித்தது. டிச.1 ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கை தொடங்கவுள்ளதாகவும், ஆகவே கூகுள் பயனர்கள் இந்த வார இறுதிக்குள் தங்கள் கணக்குகளில் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை அளித்து உள்ளீடு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பயன்படுத்தப்படாத கணக்கு வைத்திருக்கும் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் மாற்று(Recovery) மின்னஞ்சல் முகவரிக்கும் கூகுள் இது தொடர்பாக எச்சரிக்கை செய்தி அனுப்பி வருகிறது. தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும். நிறுவனங்கள், பள்ளிகள் அல்லது வணிகங்களுக்கான கணக்குகள் இதனால் பாதிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.