For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 16 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

09:55 PM Jan 11, 2024 IST | Web Editor
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 16 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
Advertisement

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 16 குற்றவாளிகள் குண்டர்
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

குற்ற சம்பவங்களை குறைக்க போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்படி அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன என்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;

சென்னை பெருநகரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை
கட்டுப்படுத்த, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2024முதல் 10.01.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி
மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 11 குற்றவாளிகள்,  திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 08 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 02 குற்றவாளிகள்,  சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி என மொத்தம் 22 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், கடந்த 04.01.2024 முதல் 10.01.2024 வரையிலான ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள்

சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்த சண்முகம் (எ) சண்முகநாதன் மற்றும் அரிதாஸ் (எ) அரி ஆகிய இருவரும் கடந்த 10.12.2023 அன்று, முத்துபாண்டி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, ஆர்.கே.நகர் காவல் நிலையத்திலும், கடலூர் மாவட்டம், பொன்னான்திட்டு, கிள்ளை பகுதியை சேர்ந்த சிவசுப்ரமணியன் என்பவர் தமிழ்நாடு முதலமைச்சரின் உதவியாளர் போல பேசி மிரட்டிய குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவிலும், சென்னை, பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (எ) மனோஜ் (எ) கும்கி மனோஜ், என்பவர் கடந்த 19.12.2023 அன்று பிரேம்குமார் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக பெரியமேடு காவல் நிலையத்திலும், சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவர் கடந்த 09.12.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக நீலாங்கரை காவல் நிலையத்திலும், சென்னை, தியாகராயர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த 15.12.2023 அன்று குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக வேளச்சேரி காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு
உட்படுத்தப்பட்டனர்.

இதே போன்று சென்னை, சூளை பகுதியைச் சேர்ந்த பாலாஜி, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த எபினேசர், அம்பத்துர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், சூளை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், பள்ளிகரணை பகுதியைச் சேர்ந்த வினோத்ராஜா (எ) சென்ட்ரல் ராஜா, பெ.முருகேசன் ஆகிய 5 நபர்களும் கடந்த 20.12.2023 அன்று திருநங்கைகளிடம் தங்க செயின் மற்றும் செல்போன்கள் பறித்து சென்ற குற்றத்திற்காக, T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், சென்னை, கொலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (எ) கார்த்திக் (எ) துப்பாக்கி கார்த்திக், என்பவர் கடந்த 22.12.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக, R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும், சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜி (எ) குள்ள ராஜி, என்பவர் கடந்த 18.11.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, R-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், சென்னை, தியாகராயர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் மற்றும் ஆனந்தராஜ்,  ஆகிய இருவரும் கடந்த 23.12.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக, R-1 மாம்பலம் காவல் நிலையத்திலும், சென்னை, பூக்கடை பகுதியைச் சேர்ந்த அமுலு, என்பவர் புகையிலை விற்பனை செய்த குற்றத்திற்காக C-1 பூக்கடை காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சண்முகம் (எ) சண்முகநாதன், அரிதாஸ் (எ) அரி, சிவசுப்ரமணியன். கோவிந்தராஜ் (எ) மனோஜ் (எ) கும்கி மனோஜ், அஸ்வின், பாலமுருகன் ஆகிய 6 நபர்களை கடந்த 04.01.2024 அன்றும், பாலாஜி, எபினேசர், அய்யப்பன், மணிகண்டன், வினோத்ராஜா (எ) சென்ட்ரல் ராஜா ஆகிய 5 நபர்களை கடந்த 06.01.2024 அன்றும், கார்த்திகேயன் (எ) கார்த்திக் (எ) துப்பாக்கி கார்த்திக், ராஜி (எ) குள்ள ராஜி ஆகிய 2 நபர்களை கடந்த 08.01.2024
அன்றும், ரமேஷ்குமார், ஆனந்தராஜ், அமுலு ஆகிய 3 நபர்களை கடந்த 09.01.2024 அன்றும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில் பேரில், மேற்படி 16 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement