தமிழகத்தில் அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி நோய்!
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பொன்னுக்கு வீங்கி எனும் வைரஸ் தொற்று ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் வந்தாலே வெயிலின் தாக்கத்தால் அம்மை, காலரா, பொன்னுக்கு வீங்கி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்கும். அந்த வகையில் இந்தாண்டும் வைரஸின் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய், காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படலாம்.
பொன்னுக்கு வீங்கி பாதித்தவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் திவலைகள் மூலம் பிறருக்கு அது பரவும். ஒரு வாரத்திலிருந்து 14 நாள்களுக்குள் அந்த பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்பதால், நோய் தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலே அந்த பாதிப்பு சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளதாவது;
“ஒவ்வொரு பருவ காலங்களிலும், சில வகை தொற்றுகள் பரவுகின்றன. கோடை காலத்தில் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிப்பது இயல்பு. அதன்படி, கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் ஐந்து மடங்கு அதிகமாக பொன்னுக்கு வீங்கி பரவியுள்ளது.
இந்த நோய் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், தொற்றுக்குள்ளான ஓரிரு வாரத்தில் தானாகவே அது சரியாகிவிடும். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. தடுப்பு மருந்துகளைக் காட்டிலும், நோய் எதிர்ப்பாற்றலே இத்தகைய பாதிப்பை சரி செய்துவிடும் என்பதால் பொது மக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.