தமிழ்நாட்டில் அதிகரிக்கும் #Mumps நோய்!
தமிழ்நாட்டில் பொன்னுக்கு வீங்கி நோய் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய் காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படலாம்.
இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கபம், சளி மற்றும் நெருக்கமான தொடர்பு மூலம் பரவும் வைரசால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த தொற்றானது தானாகவே சரியாகிவிடும். அரிதாகச் சிலருக்கு இது மூளை காய்ச்சலாகவோ, விரை வீக்கமாகவோ தீவிரமாகலாம். தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீரும், திரவ உணவுகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு ஏதேனும் பிரச்னைகள், அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இந்நிலையில் தமிழ்நாட்டில் பொன்னுக்கு வீங்கி நோய் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது;
ஒவ்வொரு பருவ காலங்களிலும், சில வகை தொற்றுகள் பரவுகின்றன. அந்த வகையில் தற்போது பொன்னுக்கு வீங்கி பரவி வருகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழாண்டில் அந்த பாதிப்பு சற்று கூடுதலாக பதிவாகியுள்ளது. இருந்தாலும், அதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தொற்றுக்குள்ளான ஓரிரு வாரத்தில் தானாகவே அது சரியாகிவிடும். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது.
தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் எம்.ஆர். எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதேவேளையில், எம்.எம்.ஆர். எனப்படும் தட்டம்மை மம்ப்ஸ் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. தடுப்பு மருந்துகளைக் காட்டிலும், நோய் எதிர்ப்பாற்றலே இத்தகைய பாதிப்பை சரி செய்துவிடும் என்பதால் பொது மக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை” என தெரிவித்தார்.