பொன்னேரியில் மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொன்னேரி நகராட்சியில் மின் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு பெருமழையின் போதும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், வங்கக் கடலில் உருவான புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டது. இப்புயலால், சென்னையில் 400 மி.மீ-க்கும் அதிகமாக மழை பெய்தது. இம்மழையால் சென்னையே வெள்ளக் காடாக மாறியது.
இந்த மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. புயல், மழை ஓய்ந்தும் இப்பகுதிகளில் வெள்ளநீர் குறையாமல் இருந்து வருகிறது. இதனால், வெள்ள நீர் சூழந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மின்சாரம், பால்,குடிநீர், உணவு, இயற்கை உபாதைகளைக் கழிக்க நீர் இன்றி அரசின் உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்து மின்சாரம் வழங்கவில்லை எனவும், அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும் பொன்னேரி பழவேற்காடு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல்துறையினர், நகராட்சி நிர்வாகம் சார்பில் மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.
அப்போது மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் செய்வதாகவும், தற்போது வரை மின்சாரம் வழங்கபடவில்லை எனவும், விரைவில் மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியது.