சிறுவனின் கன்னத்தில் ஏற்பட்ட காயம் - தையல் போடாமல் ஃபெவிக்விக் தடவிய செவிலியர் சஸ்பெண்ட்!
கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டம் ஆதூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த 14ம் தேதி கன்னத்தில் காயமடைந்த 7வயது சிறுவனை பெற்றோர்கள் அழைத்து சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த நர்ஸ் ஒருவர் சிறுவனின் காயத்திற்கு தையல் போடுவதற்கு பதிலாக பிளாஸ்டிக் பொருட்களை ஒட்ட பயன்படுத்தும் பெவிக்குவிக்கை கொண்டு ஒட்டினார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், நர்ஸிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த நர்ஸ், தையல் குழந்தையின் முகத்தில் ஒரு வடுவை எற்படுத்தும் எனவும் அதனால்தான் தோலின் மேற்பரப்பில் மட்டும் ஃபெவிக்விக் தடவியாதாகவும் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, பெற்றோர்கள் இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர் .
இதனையடுத்து, கொஞ்சம் கூட வேலையில் அக்கறை காட்டாமல் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட நர்சை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சிறுவனுக்கு செப்டிக் எதுவும் ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? எனவும் இணையவாசிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை, அஜாக்கிரதையாக செயல்பட்ட நர்ஸ் ஜோதியை சஸ்பெண்ட் செய்தனர். தற்போது, சிறுவனின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், பிசின் தடவப்பட்ட தோலில் தற்போது எந்த மாசுபாடும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.