இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்!
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 2021-ம் ஆண்டின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் சமூக ஊடகங்கள் தங்களது மாதாந்திர நடவடிக்கைகளை மத்திய அரசுக்கு தெளிவுபடுத்தி வருகின்றன. அவற்றில், பயனர்களின் புகார்கள் முதல் அரசின் பரிந்துரை வரை பல தரப்பிலான கோரிக்கைகளின் கீழ் முடக்கப்படும் சமூக ஊடக கணக்குகள் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாட்ஸ் ஆப் சார்பிலான இந்த நடவடிக்கை குறித்தான தகவல்கள் மெட்டா வாயிலாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் ஆப் கணக்குகள் பயன்பாட்டில் உள்ளன. நாளுக்கு நாள் இதன் பயன்பாட்டாளர்களும் அதிகரித்து வருகின்றனர். அதோடு மோசடியில் ஈடுபடும் கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு மோசடி மற்றும் வீதிமீறல்களில் ஈடுபடும் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவில் மட்டும் 71 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நவம்பர் 1 முதல் 30 ம் தேதி வரை மட்டும் 71,96,000 கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்குகளில் சுமார் 19,54,000 கணக்குகள் கொள்கை மீறல் அடிப்படையில் வாட்ஸ் ஆப் நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கையின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 8841 புகார்கள் பயனர்களிடம் இருந்து பெறப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.