அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம் - மத்திய அரசு அறிவிப்பு!
அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக பிள்ளையை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசு பெண் ஊழியர்கள் உயிரிழப்புக்கு பிறகு தங்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்துக்கு கணவருக்குப் பதிலாக குழந்தைகளின் பெயரை பரிந்துரை செய்யும் வகையில், அரசு ஊழியர்கள் ஓய்வூதிய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள் ; PhD படிக்க பதிவு செய்த பெண்களின் பட்டியல் – தமிழ்நாடு முதலிடம்..!
இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், 'பெண் அரசு ஊழியர் உயிரிழப்புக்குப் பின், குடும்ப ஓய்வூதியத்தை அவருடைய கணவர் மட்டுமே பெறும் வகையில் சட்டம் இருந்தது. இதில் மத்திய அரசு தற்போது திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெண் அரசு ஊழியர்கள் தனது மகன் அல்லது மகளின் பெயரை குடும்ப ஓய்வூதியம் பெற பரிந்துரை செய்து நியமனம் செய்ய முடியும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், 'விவாகரத்து அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விவகாரங்களுக்கு எளிதாக தீர்வு காண மத்திய அரசின் இந்த ஓய்வூதிய சட்டத் திருத்தம் உதவும். பெண்களுக்கு சம உரிமையை வழங்கும் வகையில் இந்த சிறப்பான முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது' என்றார்.
'இந்த சட்டத் திருத்தத்தின்படி, 'தனது இறப்புக்குப் பிறகு குடும்ப ஓய்வுதியத்தை கணவருக்குப் பதிலாக தகுதியுள்ள தனது குழந்தைக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று பணிபுரியும் துறையின் தலைமை அலுவலகத்துக்கு பெண் அரசு ஊழியர்கள் எழுத்துபூர்வமாக கோரிக்கை அனுப்ப வேண்டும்' என்று மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை தெரிவித்துள்ளது.