சென்னையில் பட்டப்பகலில், ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை...
சென்னையில் பட்டப்பகலில், டாஸ்மாக் பாருக்குள் குடித்துக் கொண்டிருந்த ரவுடியை இழுத்து வந்து ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனை வால்டாக்ஸ் சாலையை சேர்ந்தவர் ரவுடி பிரேம்குமார். இவரது
மனைவி ராஜஸ்ரீ. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருக்கும் புளியந்தோப்பை சேர்ந்த ரவுடி சேட்டு கும்பலுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக
கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (டிச.20) பிரேம்குமார் அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு வந்தார். அவரது கூட்டாளிகள் வசந்தகுமார் மற்றும் நரேஷ்குமார் ஆகியோரும் உடன் வந்தனர். கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜராகி விட்டு, பெரியமேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரிப்பன் மாளிகை மற்றும் காவல் ஆணையர் அலுவலகம் நடுவே உள்ள தந்தூரி என்ற உணவகத்தில் மேல் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த பிரேம்குமார், வசந்தகுமார், நரேஷ் ஆகியோரை பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்கியதால், மது அறுந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். அப்போது பிரேம்குமாரை மட்டும் வெளியே இழுத்து வந்து கொடூரமாக வெட்டி விட்டு தப்பி சென்றது.
இதில் வசந்த குமார், நரேஷிற்கு வெட்டுவிழுந்தது. தகவலறிந்து, பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேம் குமாரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரேம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் அரிவாள் வெட்டு விழுந்த நரேஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோருக்கு கை மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டு காயத்துடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கடந்த 2013 ஆம் ஆண்டு பிரேம்குமாரின் சகோதரர் ரஞ்சித் என்பவரை புளியந்தோப்பு பகுதியில் வைத்து ரவுடி சேட்டு கும்பல் வெட்டிக் கொலை செய்ததாக தெரிகிறது. தனது சகோதரர் ரஞ்சித் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக பிரேம்குமார் அடிக்கடி சேட்டு கும்பலுடன் மோதிக்கொண்டதாக தெரிகிறது.
கடந்தாண்டு, சகோதரர் ரஞ்சித்தை கொலை செய்த சேட்டுவை புளியந்தோப்பில்
பிரேம்குமார் தலைமையிலான ரவுடி கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை
சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி இந்த வழக்கு
சென்னை அல்லி குளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சேட்டுவை கொலை
செய்ததற்காக பழிவாங்க சேட்டுவின் சகோதரர் சூர்யா தலைமையிலான ரவுடி கும்பல்
தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூர்யா கும்பல் தான் பிரேம்குமாரை வெட்டி கொன்றதாக போலீசார்
சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டி சாய்த்து விட்டு தப்பியோடிய ஏழு பேர் கொண்ட
மர்மகும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான
வாகனங்கள் செல்லக்கூடிய பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்னை பெருநகர காவல்
ஆணையர் அலுவலகம் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலகம் ஆன ரிப்பன் மாளிகை
உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருக்கும் பகுதியில் இந்த படுகொலை சம்பவம்
அரங்கேறி உள்ளது.