தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் சதமடித்த வெயில்!
பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 4 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதேபோல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருத்தது.
ஒருபுறம் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கரூர் மாவட்டத்தில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், சென்னை மற்றும் வேலூரில் தலா 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சேலம் மாவட்டத்தில் 98.78 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், தஞ்சாவூரில் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் 97.88 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், திருத்தணியில் 96.98 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், ராமநாதபுரத்தில் 95.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், தருமபுரியில் 94.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.