“நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது” - காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்திட்டம் குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்று, ஆசிரியர்களிடம் பேட்டியளித்ததையும் அவர்கள் பாராட்டியதையும் செய்தியாக வெளியிட்டது.
இந்த நிலையில் அந்த செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சிந்தனையுடன் கூடிய திட்டமிடல் என்பது உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வாக மட்டுமின்றி நாம் நினைத்துப் பார்க்காத வகையில் சமூகத்தை மாற்றத்தை ஏற்படுத்திகிறது. ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’ குழந்தைகளிடையே மருத்துவமனை செல்லுதல் மற்றும் கடுமையான நோய்களைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
அதே நேரத்தில் மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தவும் நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது. நன்கு சாப்பிடுவதால் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகின்றனர். இது நீண்ட கால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
தமிழ்நாடு கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இது குறைக்கப்பட்ட TFR மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைக்க வழிவகுக்கிறது. அதே தொலைநோக்கு அணுகுமுறையுடன், திராவிட மாடல் அரசு குறிப்பிடத்தக்க, தொலைநோக்கு பலன்களை அளிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.