2023-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகள்!
2023-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு அரசியலில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின... அவை குறித்து பார்க்கலாம்...
ஜல்லிக்கட்டு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு...!
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு மே 18-ல் தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகமா? தமிழ்நாடா?
தமிழ்நாடு என்னும் வார்த்தையினை விட தமிழகம் என்னும் சொல் தான் சரியானது என்று சர்ச்சை எழுப்பும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த ஜனவரியில் கருத்து தெரிவித்திருந்தார். இது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.
12 மணி நேர வேலை மசோதா சர்ச்சை
கடந்த ஏப்ரலில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனியார் நிறுவனங்களில் 8 மணிநேர வேலைநேரத்தினை 12மணிநேரமாக உயர்த்தும் மசோதா பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவிற்கு எதிர்கட்சிகள், தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பேனா நினைவு சின்னம் - சர்ச்சை
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக.,கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையிலிருந்து 360மீ., கடலுக்குள் கண்ணாடி பாலம் அமைத்து அதன்மீது பொதுமக்கள் நடந்துச்சென்று பேனா நினைவுச்சின்னத்தினை பார்வையிடும் வகையில் ரூ.81 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு எதிரான வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது.
ஆளுநர் ரவிக்கு எதிரான தனி தீர்மானம்
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட 14 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்தார். மேலும், மாணவர்களுடனான ஓர் உரையாடலின் போது நிலுவையில் வைத்திருக்கும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும் என்றும் கூறியிருந்தார்.இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். தொடர்ந்து சட்டசபையில், ஆளுநருக்கு எதிராக அரசு சார்பில் தனி தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்னும் விதி திருத்தப்பட்டு, அவருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இந்த தீர்மானத்தினை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு இந்த தீர்மானம் விவாதத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா
தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் ஜூன் 30 தேதியுடன் ஓய்வு பெற்றார். இந்தநிலையில் தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ம் தேதி பொறுப்பேற்றார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லை
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தெரிவித்தனர். தடைக்கான போதுமான காரணங்களை விளக்கவில்லை எனக்கூறி சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்-லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
விடைபெற்ற சைலேந்திரபாபு...புதிய டிஜிபி சங்கர் ஜிவால்
தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக சங்கர் ஜிவால் கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றார். தமிழக சட்ட-ஒழுங்கு துறையின் 32வது டிஜிபி ஆக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு, அதற்கான ஆவணங்களை சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி முதல், அமைச்சர் பொன்முடி வரை
சட்டவிரோத பணபரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை கடந்த ஜூன்.14ம்.,தேதி செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துசென்ற போது பாதி வழியிலேயே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் உயர்நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வரும்நிலையில், அவரது ஜாமீன் மனுக்களும் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்படுகிறது. திமுக அமைச்சரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை தொடர்ந்து, சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை அவர் இழந்தார். சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவியும், உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பும் பறிபோனது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியில் மட்டும் அவர் தொடர்ந்து இருந்து வருகிறார். மனைவி விசாலாட்சியுடன் கோர்ட்டில் சரணடைய 30 நாட்கள் பொன்முடிக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய பொன்முடி முடிவு செய்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளரானார் பிரேமலதா விஜயகாந்த்
தேதிமுக நிறுவன தலைவர் விஜயகாந்த் டிசம்பர் - 28 ஆம் தேதி உயிரிழந்தார். இதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்பில் இருந்து சற்று மீண்டு வந்த விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார்.