வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம் - வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கைது!
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு வனத் துறையினருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் எம்.டி.எஸ். துறையில் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு எழுத்து தேர்வு கடந்த மாதம் 8, 9 - ந் தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழ் நாடு மட்டுமின்றி உத்தரபிரதேசம், அரியானா, மத்தியபிர தேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று(மார்ச்.10) கோவையில் நடை பெற்ற நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்தனர். அப்போது ஒரு சிலரின் புகைப்படம் மற்றும் கைரேகை சரிபார்க்கப்பட்டது. அதில் எழுத்து தேர்வு நடந்த போது சேகரித்த கைரேகைக்கும், நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்களிடம் பெறப்பட்ட கைரேகைக்கும் வேறுபாடு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 8 பேரும் ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறு நபர்களை தேர்வு எழுத வைத்தது தெரியவந்தது. இது குறித்து மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன அதிகாரிகள் கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட் டம் செய்து தேர்வு எழுதிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிஷிருமார் (வயது 26), பிபன்குமார் (26), பிரசாந்த் சிங் (26), நரேந்திரகுமார் (24), ராஜஸ்தானை சேர்ந்த லோகேஷ் மீனா(24), அசோக்குமார் மீனா (26), அரியா னாவை சேர்ந்த சுப்ராம்(26), பீகாரை சேர்ந்த ராஜன் கார் காண்ட் (21) ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.