“கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன்” - நடிகர் மகேந்திரன்!
“கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன்” என நடிகர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்
வெளியாகவுள்ளது. Action Reaction நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழ்நாடு முழுவதும் இப்படத்தினை வெளியிடுகிறார். இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொண்ட இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மகேந்திரன்,
“நான் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில்
எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவை தந்து கொண்டே இருக்கிறீர்கள். அதற்கு நன்றி.
கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார். நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரொடியூசராக வந்தார்.
பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி” என தெரிவித்தார்.
கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக, சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, GM சுந்தர், தசரதி, அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி
கமல் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.