இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு : பிரபலங்கள் இரங்கல்!
இளையராஜா மகள் பவதாரிணியின் மறைவையொட்டி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் பவதாரிணி. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் ஆவார். இவர் சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்த மிக சொற்பமான பெண் இசையமைப்பாளர்களில் பவதாரிணியும் ஒருவர். இவர் ‘பாரதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடல் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.
பவதாரிணி அழகி, புதிய கீதை, கோவா, அனேகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக இலங்கைக்கு சென்றிருந்தார். இதையடுத்து அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.
பவதாரிணியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதேபோல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர், இயக்குநர் செல்வராகவன், நடிகர் விஷால் உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, "காலத்தால் அழியாத பல பாடல்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்த பவதாரணி, இனிமையான தனது தனித்துவம் வாய்ந்த குரலால் தனித்து நின்றவர். இசையமைப்பாளராகவும் பரிணமித்த அவர் தனது தந்தையைப் போலவே இசை உலகில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்க வல்லவராகத் திகழ்ந்தார். அவரது திடீர் இழப்பு இசைத் துறையில் ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரை இழந்து துயருரும் அவரது குடும்பத்தாருக்கும். அவரைச் சார்ந்தவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் தனது X தள பக்கத்தில், "அன்புத் தோழி பவதாரிணியின் மறைவால் நான் மிகுந்த வருத்தம் அடைந்ததுள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர், "பவதாரிணியின் மறைவால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளேன். அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இளையராஜா சாரின் மகளாகவோ, யுவனின் தங்கையாகவோ அல்லது வாசுகியின் உறவினராகவோ உங்களை நான் அறிந்ததை விட, ஒரு சகோதரியாக, என்னுடைய உறவினராக, உங்களை மிஸ் பன்றேன். உங்கள் முழு குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார்.