#WomensT20WorldCup அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி நேற்று ( ஆகஸ்ட் -27ம் தேதி) வெளியிட்டுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி இந்திய அணியானது வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா, துபை நகரங்களில் நடைபெற இருக்கின்றன.
இதையும் படியுங்கள் ;#JammuKashmir தேர்தல் - INDIA கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு!
உலகக் கோப்பை போட்டிகள் முதலில் வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு நிலவும் அரசியல் அமைதியின்மை காரணமாக பல வீரர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததை அடுத்து, போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இரண்டு மைதானங்களில் மட்டுமே மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் ஏ பிரிவிலும், பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.
போட்டியில் ஒவ்வொரு அணியும் நான்கு குரூப் போட்டிகளில் விளையாடும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் அரையிறுதிக்கு முன்னேறும். அக்டோபர் 20 ஆம் தேதி துபையில் நடக்கும் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. அரையிறுதி, இறுதிப் போட்டிகள் இரண்டிற்கும் ரிசர்வ் நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி முதல் 2 இடங்களில் இடம்பெற்றால் முதல் அரையிறுதியில் இடம்பிடிக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் அபுதாபியில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் மூலம் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் போட்டிக்குத் தகுதி பெற்றன. போட்டிக்கு முன்னதாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை 10 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றது.