இலங்கை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை ஒளிபரப்ப தடை- மத்திய அரசு மீது குற்றச்சாட்டு!
இலங்கை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் நிலங்களில் தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்கள் ஏராளமாக பயிரிடப்பட்டது. அதில் குறைந்த கூலிக்கு வேலை செய்யவும், விவசாயம் உற்பத்தி சார்ந்த துறைகளில் பணி செய்யவும் தமிழ்நாட்டு மக்கள் இலங்கைக்கு பிரிட்டிஷாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தென்தமிழ்நாட்டில் இருந்த பல அப்பாவி மக்களை வலு கட்டாயமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். பிரிட்டிஷாரால் வலுக்கட்டாயமாக கொண்டு போகப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 வது ஆண்டை முன்னிட்டு “நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் 3 நாட்கள் நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்ட தொழில் துறை மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் முன்னெடுத்தது. மலையக தமிழர்களின் சார்பில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழ்நாட்டிலிருந்தும் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்பி சசி தரூர், அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன் , பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ராம் மாதவ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கி அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்துரையில்..
“இலங்கை நாட்டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் காலத்தையும் கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர்கள். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை இலங்கை பத்திரிகை மற்றும் செய்தித் தாள்களில் வெளியானது. ஆனால் நவம்பர் 3 ஆம் தேதி கொழும்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் காணொலி உரை ஒளிபரப்பாகவில்லை. இதற்கு மத்திய அரசே காரணம் என சர்ச்சை எழுந்தது.
இதற்கு பல்வேறு தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள கணடன அறிக்கையில்.. " தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பிய காணொலி உரையை ''நாம் 200'' விழாவில் ஒளிபரப்ப தடை விதித்தது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள மத்திய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது கடும் கண்டனத்துக்குரியது.” என குறிப்பிட்டுள்ளார்.