மணப்பாறையில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - ஏராளமானோர் பங்கேற்பு
மணப்பாறையில் நடைபெற்ற மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து கட்சி பிரமுகர்கள், மத குருக்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பர். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால் இஸ்லாமியர்கள், இந்த மாதத்தை புனித மாதமாக கருதி மாதம் முழுக்க நோன்பினை கடைபிடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாத்திமா மலை ஈத்கா திடலில், மணப்பாறை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் (செவலூர் வக்ஃப்) சார்பில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று (மார்ச் - 2) மாலை நடைபெற்றது. ஜமாஅத் துணைத் தலைவர் மகாராஜா ஏ.பக்ருதீன் தலைமையில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் முகமது அனிபா முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் கத்தோலிக்க மறைவட்ட அதிபரும், பங்குத்தந்தையுமான தாமஸ் ஞானதுரை, அதிமுக நகரச் செயலாளர் பவுன் எம்.ராமமூர்த்தி, திமுக நகரச் செயலாளர் மு.ம.செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.இந்திரஜித், காங்கிரஸ் நகரத் தலைவர் எம்.ஏ.செல்வா, மமக மாநில அமைப்புச் செயலாளர் காதர் மொய்தீன், இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ராஜா வீரசிவமணி, விசிக மாவட்டச் செயலாளர் சக்தி(எ)சக்திவேல் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள், மத குருக்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.