“பாஜகவுக்கு ஒருமுறை வாக்களித்தால் 2 ஓட்டு விழுந்ததா?” - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!
கேரளாவின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளையும் VVPAT இயந்திரத்தின் மூலம் வரும் காகித ஒப்புகை சீட்டுகளையும் ஒப்பிட்டு சரிபார்க்கக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் சமூக ஆர்வலர் அருண்குமார் அகர்வால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில் 100% எல்லா வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளோடு ஒப்பிட்டு சரிபார்த்த பின்பே முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மனுக்களை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் வாதம் வைக்கும் போது, ‛தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இல்லையென்றால் நாம் மீண்டும் காகித வாக்குச் சீட்டுக்கு செல்லலாம். இல்லையெனில், நாம் வாக்களிக்கும் சின்னத்தின் சீட்டுகள் விவிபாட் இயந்திரத்தில் விழுந்து, அந்த சீட்டை வாக்காளரிடம் கொடுத்து வாக்குப் பெட்டியில் போட சொல்லலாம். அவர்கள் சரிபார்த்த பின் போடலாம் என்று நேற்று வாதம் வைக்கப்பட்டது.
இதற்கிடையே, நேற்று காசர்கோட்டில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின் போது குறைந்தது 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளைப் பதிவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. காசர்கோடு மக்களவைத் தொகுதியின் எல்.டி.எஃப் வேட்பாளரும், சி.பி.எம் தலைவருமான எம்.வி.பாலகிருஷ்ணன் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் இன்பசேகரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். இந்த 4 எந்திரங்களில் 1 முறை பாஜகவிற்கு வாக்களித்தால் இரண்டு முறை வாக்குகள் பதிவாகி உள்ளது. இது நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் 100% எல்லா வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளோடு ஒப்பிட்டு சரிபார்த்து முடிவுகள் அறிவிக்க கோரிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளாவில் காசர்கோடு பகுதியில் நடந்த மாதிரி வாக்குபதிவில் பாஜகவிற்கு ஒரு வாக்கு அளித்தால் இரண்டு வாக்குகள் பதிவானது எப்படி? இப்படி வாக்குகள் மாறி பதிவாக என்ன காரணம்? என்பது குறித்து விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதனிடையே, காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.