“தைரியம் இருந்தால் பதிலை கேட்டுவிட்டு போங்கள்” - வெளிநடப்பு செய்த அதிமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 கடந்த மார்ச் 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அடுத்தநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் இன்று(மார்ச்.20) சட்டப்பேரவையில் நடைபெற்றது.
அப்போது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஒரே நாளில் 4 கொலைகள் நடைபெற்றது” என்று சட்ட ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “குற்றங்கள் நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்களைப் போல டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் என நான் கூறவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி சாத்தான் குளம் பிரச்னையை நீங்கள் மறந்துவிடக்கூடாது” என்றார்.
முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே அதிமுக-வினர் வெளிநடப்பு செய்ய ஆரபித்தனர். அப்போது அவர்களைப் பார்த்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தைரியம் இருந்தால் பதிலை கேட்டுவிட்டு போங்கள், தைரியம் இல்லாமல் ஓடுறீங்களே ” என்றார். இருப்பினும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் பேசுகையில், “கடந்த 2012 முதல் 2024 ஆம் ஆண்டுவரை நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதிமு.க. ஆட்சியில் நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,943. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மிக அதிகமான எண்ணிக்கை, 2013 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,927. கொரோனா காலத்திலும், லாக்-டவுன் இருந்தபோதும், அதிமுகஆட்சிக் காலத்தில், 2020 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,661.
கடந்த ஆண்டுகளின் வரலாறு இவ்வாறு இருக்க, தற்போது நமது ஆட்சிக் காலத்தில் காவல் துறை மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 12 ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டில்தான் மிக, மிகக் குறைவான எண்ணிக்கையில், அதாவது, 1,540 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன; இதுதான் உண்மை. இதை நடுநிலையாளர்களும், பொது மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்” என்று கூறினார்.