"எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடைபெற்றால் மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும்" - பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் "உள்ளம் நாடி இல்லம் தேடி" என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள கேட்டுக்கடை பகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர், "அலங்காநல்லூர் என்றாலே உலகபுகழ் ஜல்லிகட்டுதான். ஜல்லிகட்டுக்கு பீட்டா அமைப்பு தடைசெய்த போது அதனை எதிர்த்து கேப்டன் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மக்கள் விரும்பும் கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி பெறும் எனவும், மதுரையில் 2011 தேர்தலில் ஏற்கனவே மத்திய தொகுதி, திருப்பரங்குன்றம் என இரண்டு தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இருப்பினும் மேலும் பல தொகுதிகளை வென்று தேமுதிக வரும். தற்போது இந்த ரத யாத்திரை மூன்றாம் கட்டத்தை நெருங்கியுள்ளது. தேர்தலுக்கு முன்னரே அதிக தொகுதிகளை சுற்றி வந்துள்ளேன். ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தேமுதிக விளங்குகிறது.
அனைத்து தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்துள்ளது தேமுதிக. இதற்கு காரணம் தேமுதிக தொண்டர்கள் தான் இதற்கான வெற்றி தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு நமக்கு கிடைக்கப் போகிறது. மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்கள் தற்போது எஸ் ஐ ஆர் மூலம் வாக்கு திருட்டை நடத்த முயற்சிப்பதாகவும் அவ்வாறு வாக்கு திருட்டு நடைபெற்றால் தமிழ்நாட்டில் மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதியின் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரமா விளங்கும் சர்க்கரை ஆலை முடக்கியுள்ளது. மேலும் இப்பகுதி கொய்யா விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதற்காக தமிழக அரசுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்தார்.
மேலும் தேமுதிக கூட்டணி வெற்றிபெறும் போது இந்த தொகுதியின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் தமிழ்நாட்டில் தற்போது எஸ்ஐஆர் எனும் வாக்கு திருட்டு நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நாம் அனைவரும் நமது வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வரும் நாளைக்கு வாக்குச்சாவடி சென்று தங்களது வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை உறுதி செய்து வாக்கு திருட்டு நடக்காமல் தடுப்பது நமது கடமை.
மேலும் மதுரையின் சிறப்புகள் குறித்து மதுரை மல்லி, மதுரை ஜிகர்தண்டா, மதுரை ஜல்லிக்கட்டு, மதுரை புரோட்டா, மதுரை கறி தோசை என மதுரையின் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.