“காஞ்சிபுரம் மாநகராட்சியோடு அருகாமை ஊராட்சிகளை இணைத்தால் விவசாயம் அழிந்து போகும்!” - விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைத்தால் விவசாயம் அழிந்து போகும் என விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் அதில் உள்ள 3500 ஏக்கருக்கு மேற்பட்ட விலை நிலங்கள், 1500 விவசாயிகள், 15,000 மேற்பட்ட விவசாயக் கூலி தொழிலாளர்கள், 15 ஏரிகள், 5 தாங்கள், 15 குளங்கள், 50க்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகள், பொதுப்பணி துறை கால்வாய்கள் அதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் என அனைத்தும் பாதிக்கப்படும். அதனால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயி சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது குண்டு குளம், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைக்க தன்னிச்சையாக முடிவெடுத்தாக குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல் கிராம சபை கூட்டங்களில் 11 ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என தீர்மானம் போட்ட பிறகும் மக்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் எந்த விதமான அறிவிப்பும் செய்யாமல் மாநகராட்சியில் கிராமங்களை இணைக்கும் திட்டம் எவ்வாறு சாத்தியமாகும் என கூறி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.