உத்தரப்பிரதேசத்தில் INDIA - கூட்டணியின் அமோக வெற்றிக்கு தடைக்கல்லான பகுஜன் சமாஜ் கட்சி!
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 16 தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு தடைக்கல்லாக இருந்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தல் பாஜவுக்கு பெரும் தோல்வியை தந்துள்ளது எனவே கூறலாம்.
காரணம் தமிழ்நாடு, பஞ்சாப், மணிப்பூர், மிசோரம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் ஒரு தொகுதியை கூட பாஜக கைப்பற்றவில்லை. அதுபோல அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குறைவான இடங்களிலேயே பாஜக வெற்றிப் பெற்றுள்ளது.
ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரப் பிரதேசம் ஏன் பாஜகவுக்கு கைக்கொடுக்கவில்லை எனவும் கேள்விகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி பல இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 தொகுதிகள் என மொத்தம் 43 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக 33, ராஷ்ட்ரீய லோக் தளம் 2, அப்னா தளம்(சோனிலால்) ஒரு தொகுதியிலும், தனித்துப் போட்டியிட்ட ஆசாத் சமாஜ்(கன்ஷி ராம்) கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதனால் தான் மாயாவதியால் 16 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களிடம், இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வீழ்ந்துள்ளனர். இந்தியா கூட்டணியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி வைத்திருந்தால், இந்தியா கூட்டணிக்கு மேலும் பல இடங்கள் உத்தரப்பிரதேசத்தில் கிடைத்து பாஜகவைவிட அதிகளவு ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கும்.
பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைந்து, ஆட்சி அமைப்பதற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.