“நான் இல்லாவிட்டால் தேர்தலில் தோற்றிருப்பார்” - முற்றும் மோதல்... அதிபர் ட்ரம்பை விளாசிய எலான் மஸ்க்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும், டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கிற்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இதுநாள் வரை ட்ரம்பிற்கு ஆதரவாக பேசிவந்த எலான் மஸ்க், தற்போது அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் தனது ஆதரவு இல்லாவிட்டால் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்து இருப்பார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப்,
“எலானால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் எலானுக்கு நிறைய உதவி செய்துள்ளேன். அவர் என்னை பற்றி பல அருமையான விஷயங்களை கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் அவர் என்னைப்பற்றி மோசமாகப் பேசவில்லை, ஆனால் அதுவும் கூடிய விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட எலான் மஸ்க்,
“எனது ஆதரவு இல்லாவிட்டால் ட்ரம்ப் தேர்தலில் தோற்று இருப்பார். ஜனநாயக கட்சியினர் ஆட்சியில் இருந்து இருப்பார்கள். குடியரசு கட்சி செனட் சபையில் 51-49 என இருந்து இருக்கும். நன்றி கெட்ட தன்மை” எனக் குறிப்பிட்டுள்ளார்.