நான் தலையிடாவிட்டால் இந்நேரம் இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்துகொண்டிருக்கும் - மீண்டும் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தான் சரியான நேரத்தில் தலையிட்டுத் தடுத்ததாகவும், இல்லையெனில் இரு நாடுகளும் போரில் ஈடுபட்டிருக்கும் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் ஸ்காட்லாந்தில் ஊடகங்களிடம் பேசியபோது, உலகளவில் தான் ஆறு பெரிய போர்களைத் தடுத்ததாகக் கூறினார். இவற்றில், இந்தியா - பாக்கிஸ்தான் மோதல் மிகப் பெரியது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் "நான் இல்லையென்றால், ஆறு பெரிய போர்கள் நடந்திருக்கும். இந்தியா-பாகிஸ்தான் அவற்றில் மிகப்பெரியது. ஏனென்றால் இவை இரண்டும் அணு ஆயுதம் ஏந்திய நாடுகள், அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், போர் அதிகரிப்பு மற்றும் அணு ஆயுத வீழ்ச்சி போன்ற பயங்கரமான சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்களை நான் நன்கு அறிவேன். போருக்குச் செல்ல விரும்பினால் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட மாட்டேன் என்பதை நான் தெளிவுபடுத்தியுள்ளேன் என்றும் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் போரைத் தானே நிறுத்தியதாக டிரம்ப் ஏற்கனவே பலமுறை கருத்து தெரிவித்த நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகள் இருதரப்புத் தன்மை கொண்டவை என்றும், இதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கு இடமில்லை என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் நீண்டகாலமாகவே பதட்டமானவையாக இருந்து வந்துள்ளன. காஷ்மீர் பிரச்சனை, எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் போன்ற பல காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலைகளில் அமெரிக்கா போன்ற வல்லரசுகள், அமைதியை நிலைநாட்டவும், பதட்டங்களைத் தணிக்கவும் ராஜதந்திர ரீதியான முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம் என கூறினார்.