"எல்லோரும் ஓரணியில் திரண்டால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்பொழுது கல்லூரியின் 'Global Jamalians Block' கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், "இளம் மாணவர்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கல்லூரி நட்பு கடைசி வரை தொடர வேண்டும். எனக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது. அதேபோல் அரசியல் புரிதலும் ரொம்ப அவசியம்.
ஜமால் முகமது கல்லூரிக்கு நான் ஏற்கனவே 2006-ல் நிறுவன நாள் விழாவிற்கு வந்திருக்கிறேன். 2011 மற்றும் 2016-ல் யுசிஜி ஆற்றல்வள தனித்தகுதி பெற்ற கல்லூரியாக ஜமால் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டமைப்பு வசதிகளுக்கு 3 கோடி நிதி ஒதுக்கியது. மாணவர்களால் மட்டும் தான் இந்த கல்லூரிக்கு பேரும் புகழும் கிடைத்து கொண்டிருக்கிறது.
கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இஸ்லாமிய சகோதரர்களின் உரிமைகளை காக்கும் இயக்கமாக திமுக அரசு நிச்சயம் இருக்கும். 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும். ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி தான், அதனால் தான் திமுக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான பல வழிகள் உள்ளன. ஆனால், மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது. அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம் ஆகியோர் இந்த கல்லூரியில் படித்தவர்கள் தான். நாளை உங்களில் ஒருவரும் இந்த பட்டியலில் வரலாம்.
"ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தோடு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது. கல்லூரிகள் எத்தனையோ பல தலைவர்களை நாட்டுக்கு கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட தலைவராக மாணவர்கள் நீங்களும் உருவாக வேண்டும் என்று பேசினார்.