தெலங்கானாவில் பாஜக வென்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர் - பிரதமர் மோடி உறுதி!
தெலங்கானாவில் பாஜக வென்றால், பாஜகவின் முதல் முதலமைச்சர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று உறுதியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
தெலங்கானாவின் 119 பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை முடியும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முழுவேகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மோடி, அமித் ஷா, அனுராக் தாக்கூர், ஜேபி நட்டா, ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு நாள்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை அமைச்சர் சிவக்குமார், அமைச்சர்கள் என பல தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலத்தில் ஆளும் மாநில முதலமைச்சரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் மற்றும் அந்தந்த கட்சியின் மாநிலத் தலைவர்கள் தவிர தேசிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் மாநிலத் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.
”நான் எங்கு சென்றாலும், ‘முதல்முறையாக தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்க போகிறது’ என்ற குரல் ஒலிக்கிறது. தெலங்கானாவில் பாஜக வென்றால், பாஜகவின் முதல் முதலமைச்சர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று உறுதியளிக்கிறேன். இனி தெலங்கானாவை அதன் தலைவிதிக்கு விட்டுவிட முடியாது. நாம் கனவு காணும் தெலங்கானாவை உருவாக்க வேண்டிய நேரம் இது. அதற்கு தெலங்கானாவுக்கு பாஜக மட்டுமே தேவை.
சொந்தங்களுக்கு ஆதரவான கொள்கை, நிலைப்பாடு, ஊழல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டால் உடனே பிஆர்எஸ் அல்லது காங்கிரஸ் போன்ற கட்சிகள் தான் நினைவுக்கு வருகின்றன. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எப்போது பிஆர்எஸ்-க்கு மாறுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே தெலங்கானாவில் காங்கிரசுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
காளீஸ்வரம் நீர் திட்டத்தில் என்ன நடந்தது என்று நாடு முழுவதற்கும் தெரியும். விவசாயிகளுக்கு தண்ணீர் தருகிறோம் என்ற பெயரில் பல கோடி ஊழல் செய்தார் கே.சி.ஆர். பாஜகவை பொறுத்த வரை, நாடு மற்றும் மாநிலங்களின் வளர்ச்சியே முதன்மையானது. காங்கிரசுக்கு வாக்களிப்பது என்றால், மீண்டும் கேசிஆர் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய ஒரே ஒரு வழி தாமரை பட்டனை அழுத்தி பாஜகவை ஆட்சியில் அமர்த்துவது தான்.” இவ்வாறு அவர் பேசினார்.