“இன்று அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால், நாம் இந்தியில் பேசிக் கொண்டிருந்திருப்போம்” - உதயநிதி ஸ்டாலின்!
சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மயிலாப்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி,
“நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் வாய்ப்பளிக்க மறுக்கிறார்கள் என இப்போதுதான் தெரிகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 235 கோடி அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவி குழுவிற்கு கட்டிடம் கேட்டுள்ளார்கள். கிராமப்பகுதிகளில்
உள்ளது. நகரப் பகுதிகளில் இல்லை. சென்னைக்கு முதல்முறையாக கேட்டுள்ளார்கள். முதலமைச்சரிடம் சொல்லி அதனை செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாவது மொழியாக இந்தியை திணிக்கும் முயற்சி, நாடாளுமன்றத்தின் தொகுதி மறுவரையறை மூலமாக தமிழ்நாட்டில் தொகுதிகளை குறைப்பது என இரண்டையும் எதிர்ப்போம் என முதலமைச்சர் தன்னுடைய பிறந்தநாள் உறுதிமொழியாக தெரிவித்துள்ளார்.
புதியக்கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே 2150 கோடி ரூபாயை தருவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டி கொண்டிருக்கிறார். இவர்கள் மிரட்டினால் பயப்படுவதற்கு அதிமுகவினர் கிடையாது, நாம் திமுகவினர். ஆண்டு கொண்டிருப்பது எடப்பாடி பழனிச்சாமி அல்ல. திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
தமிழ்நாட்டிலிருந்து முதுகெலும்பு உள்ள ஒரு தலைவர் வந்திருக்கிறார் என வட
மாநிலங்களில் பாராட்டி கொண்டிருக்கிறார்கள். செம்மொழியான தமிழ் இருக்கும்போது மூன்றாவது மொழி எதற்கு என மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மத்திய அரசிடம் இருந்து நம்முடைய நிதி உரிமையைத் தான் கேட்கிறோம். கூடுதலாக இன்னொரு மொழியை நாம் கேட்கவில்லை.
எந்த வடிவிலாவது இந்தியை திணித்து தமிழர்களின் பண்பாட்டை சிதைத்து,
தமிழர்களிடம் வடநாட்டு சிந்தனையை திணிக்க வேண்டும் என மத்திய பாஜக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவில் தொகுதிகள் உயரும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் அமித்ஷா. நாடாளுமன்ற மறுவரையறையை அமல்படுத்தினால் தென்னிந்தியாவில் 100 தொகுதிகள் குறையும் என பிரதமர் மோடி பேசியிருந்தார். ஆனால் இன்று இரட்டை வேடம் போட்டு கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பு இல்லை என்றால், தென்னிந்தியாவில் 100 சீட்
குறையும் என்று பிரதமர் சொன்னது உண்மையா என சொல்ல வேண்டும். எனவே இதனை திமுக வன்மையாக எதிர்க்கிறது. மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் சிலருக்கு விடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் சரிபார்க்கப்பட்டு தகுதியான மகளிருக்கு வழங்கப்படும்.
முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு என 13 துறைகளில் இந்தியாவில் முதல் மாநிலமாக இருக்கிறது. வரி செலுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் நிதி கேட்டால் கொடுப்பதில்லை. நிதி உதவி கேட்டால் ஏதாவது ஒரு விஷயத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒரு திட்டத்தை கூட தமிழ்நாட்டிற்கு ஒதுக்கவில்லை. தமிழ்நாடு என்ற பெயரை கூட உச்சரிக்கவில்லை. தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் ஆகிறது பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறாரா?. சட்டமன்றத்தில் நான்காண்டுகளாக ஆளுநரை ஒருமுறை கூட பார்த்ததில்லை. வடிவேலுவின் “வா மா மின்னல்” நகைச்சுவை காட்சியைப் போல, எவ்வளவு வேகத்தில் வருகிறாரோ அவ்வளவு வேகத்தில் சென்று விடுவார். அப்படிப்பட்ட ஒரு ஆளுநர்.
இன்று மட்டும் திமுக இல்லாமல் அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நாமெல்லாம்
இந்தியில் பேசிக் கொண்டிருந்திருப்போம். அதிமுக அந்த வேலையை செய்திருக்கும். மத்திய அரசு அனுப்பக்கூடிய அனைத்திலும் கையெழுத்தை போட்டு மாநில அரசின் ஒவ்வொரு உரிமைகளை விட்டுக் கொடுத்தது தான் அதிமுக. நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் முதலமைச்சர் தலைமையில், மத்திய அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய துரோகங்களை எல்லாம் மக்களுக்கு
எடுத்துச் சொல்ல வேண்டும். திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வென்று, இரண்டாவது முறையாக முதலமைச்சராக தொடர இன்றிலிருந்து பிரச்சார பணிகளை தொடங்க வேண்டும்” என்றார்.