"திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் கடந்த 2012 ஆண்டில் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயதான தாய் உள்ளார். இவரது பெயர் பவுலின் இருதய மேரி. இந்த நிலையில், மகனின் சொத்தில் பங்கு கேட்டு தாய் பவுலின் இருதய மேரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நாகை நீதிமன்றம் மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உள்ளது என தீர்ப்பளித்தது. நாகை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், திருமணமான மகன் இறந்த நிலையில், சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. ஏனெனில் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது. தாய்க்கு பங்கு உண்டு என்ற நாகை மாவட்ட நீதிமன்ற உத்தரவு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.