அதிகரிக்கும் #Online மோசடிகள் - வாடிக்கையாளர்கள் தற்காத்துக் கொள்ள வழி என்ன?
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் சில வழிகளை ஐசிஐசிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது.
நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி நடந்து வருகிறது. அதாவது, பொதுமக்களின் செல்போனுக்கு வரும் ஓடிபி-ஐ பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது, லிங்கை அனுப்பி அதன் மூலம் தகவல்களை திருடி பணத்தை எடுப்பது போன்ற மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளன. இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இந்த வகையான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மோசடியில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் ஐசிஐசிஐ வங்கி சில வழிகளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "நிதி அல்லது வணிக நிறுவனங்களில் இருந்து இமெயில், மெசேஜ் அனுப்புவதைப்போல சில லிங்குகளை அனுப்பி வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டு விவரங்களை மர்ம நபர்கள் திருட முயற்சிக்கின்றனர்.
அதேபோல், சில அடையாளம் தெரியாத இணையதளங்களிலிருந்து இமெயில், போன்கால் மற்றும் மேசேஜ் போன்றவற்றை அனுப்பி வங்கிக் கணக்கு விவரங்களை பெற சிலர் முயற்சிக்கின்றனர். வங்கியின் மின்னஞ்சல் முகவரி, இணைய முகவரி, லோகோ போன்றவற்றை பயன்படுத்தியும் லிங்குகளை அனுப்புவர்.
இதுபோன்ற இமெயில்களில் பெரும்பாலும் 'அன்புள்ள வாடிக்கையாளரே', 'அன்புள்ள வங்கி வாடிக்கையாளரே', 'அன்புள்ள இணைய பரிவர்த்தனை வாடிக்கையாளரே', என்றே குறிப்பிட்டிருக்கும். இந்த லிங்குகள் சிலநேரங்களில் உண்மையானதைப் போலவே இருக்கும். ஆனால், அந்த லிங்கின் மீது சுட்டி அம்புக்குறியை (Cursor) வைத்தால், லிங்கின் கீழ் அடிக்கோடு ஒன்று தோன்றும்.
வாடிக்கையாளர்கள் இதுபோன்ற மோசடி லிங்குகளை பெற நேர்ந்தால், உடனடியாக cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக சைபர் கிரைமில் புகார் அளிக்கலாம். இல்லையென்றால் 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். தவிர ஐசிஐசிஐ வங்கி உதவி எண்: 18002662 யைத் தொடர்பு கொள்ளலாம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.