நாளை முதல் அமலுக்கு வரும் “ஐசிசி”யின் 'ஸ்டாப் வாட்ச்' விதி...
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி முதல் ஐசிசியின் புதிய விதிமுறை சோதனை முயற்சியில் அமல்படுத்தப்படுகிறது.
அண்மையில் ஐசிசி புதிய விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை வீச பந்துவீச்சை மேற்கொள்ளும் அணி அடுத்த ஓவரின் முதல் பந்தை வீசுவதற்கு 60 விநாடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு 60 விநாடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் களநடுவர்கள் இரண்டு முறை எச்சரிக்கை செய்வார்கள்.
ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறை 60 விநாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி புதிய விதிமுறையை அறிவித்தது. இந்த விதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் ஐசிசியின் இந்த புதிய விதிமுறை சோதனை முயற்சியில் அமல்படுத்தப்படுவதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நாளை (டிசம்பர் 12) பார்படாஸில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக ஐசிசி தெரிவித்ததாவது, “இந்த புதிய ஸ்டாப் வாட்ச் விதிமுறை ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே பந்துவீச்சை மேற்கொள்ளும் அணி எடுத்துக் கொள்ளும் நேரத்தை குறைக்கும். சர்வதேச கிரிக்கெட்டின் வேகத்தை அதிகப்படுத்த ஐசிசி தொடர்ச்சியாக புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.