இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்தது ஐசிசி..!
இலங்கை கிரிக்கெட் அணியை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அதிரடியாக கலைத்து அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்க உத்தரவிட்டார். இந்தியாவுக்கு எதிராக 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இலங்கை அரசின் தலையீடு இருப்பதால், இலங்கை அணியை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக ரச்சின் ரவீந்திரா தேர்வு..!
இலங்கை அணி ஐசிசியின் உறுப்பினராக இருந்துகொண்டு அதன் விதிமுறைகளை கடுமையாக மீறுகிறது என்று குற்றம்சாட்டியுள்ள ஐசிசி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அந்நாட்டு அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், வாரியத்தின் விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.