ஐஏஎஸ் To மக்களவைத் தேர்தல் வேட்பாளர் - யார் இந்த சசிகாந்த் செந்தில் ?
ஐஏஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கிய சசிகாந்த் செந்தில் தற்போது திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த் சசிகாந்த் செந்தில்? விரிவாக பார்க்கலாம்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னால் டி.கே.சிவகுமார் போன்ற பல்வேறு அரசியல் தலைவர்களின் வியூகங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த தேர்தல் வெற்றிக்கு பணியாற்றியவர்களில் மிக முக்கியமான நபராக அம்மாநில தேர்தல் பொறுப்பாளர் தமிழ்நாட்டை சேர்ந்த சசிகாந்த் செந்தில் அவர்கள் பார்க்கப்பட்டார்.
காரணம் இவர் காங்கிரஸ் கட்சிக்காக சமூக வலைதள பிரச்சாரம், ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது, விளம்பரம் கொடுப்பது, நவீன வகையிலான பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்ற பணிகளை மிக சிறப்பாக செய்ததனால் தான் கர்நாடகாவில் காங்கிரஸ் மிக பெரிய வெற்றியை காண முடிந்ததாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.வை 40 சதவீத கமிஷன் அரசு என்று விமர்சித்தது 'PayCM' 'PayMLA'ஆகிய போஸ்டர்களை ஒட்டுவது போன்ற பல விஷயங்களை செய்தது சசிகாந்த் செந்தில் மற்றும் அவரது குழுவின் யோசனை தானாம். குறிப்பாக 'PayCM' 'PayMLA'போஸ்டர்கள் கர்நாடகா மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்தது.
இப்படி கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முக்கிய பங்காற்றிய சசிகாந்த் செந்தில் சென்னையை சேர்ந்த ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி ஆணையராக பணியாற்றியதை தொடர்ந்து, அதே கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக கடந்த 2016ல் பதவி உயர்வு பெற்ற இவருக்கு, அந்த பணியில் இருந்த போது பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட அழுத்தங்கள் வந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக அந்த சமயம் பிரதமர் மோடி மீது நேரடியாக பல விமர்சனங்களை சசிகாந்த் செந்தில் வைத்ததோடு, கர்நாடகாவில் பாஜக பல ஊழல்களை செய்வதாகவும் அப்போது குற்றம் சாட்டினார் .பிறகு 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த இவர், ‘தேசத்தை கட்டமைக்கும் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டும்’ என்று கூறி 2019 செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைதள பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. பின்னர் கர்நாடகத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், காங்கிரஸ் கட்சி சார்பில்
களமிறக்கப்பட்டவர் தான் சசிகாந்த் செந்தில்.
அங்கு அவருக்கு கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்ட கையோடு, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார திட்டங்களை வகுப்பது, தேர்தல் பணிகளை திட்டமிடுவது, வேட்பாளர் தேர்வில் முடிவுகளை எடுப்பது, வாக்குறுதியை உருவாக்குவது என்று பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதே சமயம், ஹிஜாப் தடை விவகாரம், ஊழல் விவகாரம், முஸ்லிம்களுக்கான 4 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து விவகாரம் போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் விரிவாக பேசி வந்த இவர், அதனையே தனது தேர்தல் கள ஆயுதமாகவும் எடுத்துக்கொண்டார்.
குறிப்பாக கர்நாடகா தேர்தலின் போது ஒரு குழுவை உருவாக்கிய சசிகாந்த் செந்தில், அந்த குழுவினரை வைத்து காங்கிரசை வெற்றி பெற வைக்கும் பணிகளை சத்தமே இல்லாமல் மேற்கொண்டு வந்தார். இதற்காக இந்த குழுவினர் ஆறு மாதங்களுக்கு மேலாக இரவு பகல் பாராமல் காங்கிரஸ் வெற்றிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முக்கியமாக நவீன ஆன்லைன் பணி, சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்வது, வேட்பாளர்கள் பற்றிய இமேஜை உருவாக்குவது என்று சிறப்பான பணிகளை இவர்கள் மேற்கொண்டதோடு, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டபோது அதில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 தொகை, பெண்களுக்கு இலவசப் பேருந்து உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட விஷயத்திலும் மூளையாக செயல்பட்டவர் சசிகாந்த் செந்தில் தான் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் பெரிய குழு ஒன்றை அமைத்து , கள ஆய்வு மேற்கொண்டு, அந்த அறிக்கையை கட்சியின் மேலிடத்திற்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
இவ்வாறாக கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற பல்வேறு முயற்சிகள், உழைப்பு ,களஆய்வு என தனது முழு திறமையையும் வெளிக்காட்டி இருந்த சசிகாந்த் செந்தில் கடந்த வருடம் மே 3 ஆம் தேதி தனது X பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை செய்திருந்தார் அதில் "6 மாத கால கடின உழைப்பிற்கு மே 13ம் தேதி நல்ல முடிவு கிடைக்கும்'' என்று அவர் பதிவிட்டிருந்தார். சசிகாந்த் செந்தில் சொன்னது போலவே காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேலும் கர்நாடக தேர்தல் வெற்றியில் ஒரு தமிழனின் பங்கு இருப்பதை நெட்டிசன்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில்தான் தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சசிகாந்த் செந்தில் களமிறக்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தை போலவே தனது வெற்றியை தமிழ்நாட்டில் சாத்தியமாக்குவாரா சசிகாந்த் செந்தில் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.