"பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக இருந்ததால், ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிதிருந்தது.
இதனிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்!
பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும்… pic.twitter.com/0nnvPK5Ya9
— M.K.Stalin (@mkstalin) June 10, 2024