காமன்வெல்த் போட்டிகள் 2030 - இந்தியாவில் நடத்த விண்ணப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு கூடியது.இந்த கூட்டத்தில் 2030 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகளை நடத்த முன்மொழிய குஜராத் மாநிலம் அகமதாபாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் போட்டிகளை நடத்த குஜராத் மாநில அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், குஜராத் அரசுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். விளையாட்டுப் போட்டிகளின் போது ஏராளமான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள்,, சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருவார்கள் என்பதால் உள்ளூர் வணிகங்கர்கள் அதிக வருவாய் ஈட்டி பயனடைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியா கடைசியாக 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் போட்டிகள்
காமன்வெல்த் போட்டிகள் என்பது, காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஒரு சர்வதேச விளையாட்டு போட்டியாகும். மேலும் இப்போட்டிகள் காமன்வெல்த் விளையாட்டுக்களின் கூட்டமைப்பால் (CGF) இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 1930 இல் 'பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுக்கள்' என்ற பெயரில் தொடங்கிய இவ்விளையாட்டு , காலப்போக்கில் காமன்வெல்த் போட்டிகள் என மாறியது. இது ஒலிம்பிற்கிற்கு அடுத்து உலகளவில் இரண்டாவது பெரிய பன்னாட்டு விளையாட்டு ஆகும்.